கிருஷ்ணகிரி அருகே, வேறு ஒரு ஆணுடனான பழக்கத்தை கைவிட மறுத்த மனைவியை, கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, சிங்காரப்பேட்டை அருகே உள்ள மல்லிப்பட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (31), லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் 9 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
.இந்நிலையில், ரஞ்சிதாவுக்கும் உள்ளூரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துவந்துள்ளது. இது தொடர்பாக அமல்ராஜ், மனைவியை அடிக்கடி கண்டித்துள்ளார். ஆனாலும் ரஞ்சிதா, தங்கராஜ் உடனான பழக்கத்தைக் கைவிடாமல் தொடர்ந்துள்ளார். இதனால் தம்பதியினரிடையே மேலும் தகராறு முற்றியது.
ஒருகட்டத்தில் ரஞ்சிதா கணவருடன் வாழப்பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த ரஞ்சிதா, ஜூன் 3ஆம் தேதி திடீரென்று மாயமானார்.
மகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் ஆண்டாள், பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தார். இந்நிலையில் ஜூன் 4ஆம் தேதி, உள்ளூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மாமரத்தின் அடியில் ரஞ்சிதா சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
மகளை சடலமாகப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோன தாயார் ஆண்டாள், இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆண்டாள் அளித்த புகாரில், தனது மகளை அவருடைய கணவர் அமல்ராஜ் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் அமல்ராஜை பிடித்து விசாரித்தபோது, தங்கராஜ் உடனான பழக்கத்தைக் கைவிடாததால், மனைவியின் கழுத்தைக் கயிற்றால் நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து அமல்ராஜை காவல்துறையினர் கைதுசெய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைத்தனர்.