“ஆயுத பூஜை விஜயதசமி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மேல்மங்கலம் ஆகாச பிள்ளையார் கோயில் விநாயகா நண்பர்களால் நடத்தப்படும் கைப்புறா பந்தயம்... அவசியம் வந்து பாருங்க! கண்ணைக் கவரும் கைப்புறா பந்தயம்.. 5 மைல் தூரம் வீரர்களும் ஓடுவாங்க வந்து பாருங்க! உற்சாகப்படுத்துங்க..” முதல் நாளே இப்படி சுற்றுவட்டார கிராமங்களுக்கு காரில் மைக்செட் கட்டி விளம்பரம் செய்ய செவ்வாய்க்கிழமை காலை போட்டி தொடங்கும் இடத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வந்து குவிந்துவிட்டனர்.
குறிப்பிட்ட தொலைவான 5 மைல் தூரத்திற்கும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்றனர். சொன்ன நேரத்திற்கு போட்டியைத் தொடங்க தயாரானார்கள் விழாக் குழுவினர். 32 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அறிவித்தனர். ‘போட்டி தொடங்கப் போகுது முன்பதிவு செஞ்சவங்க உடனே முன்னால வாங்க’ என்று அறிவிக்க 32 காளைகளும் அவற்றின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு 32 வீரர்களும் முன்னால் வந்து நின்றனர்.
அப்போது தான் ஆர்வத்தோடு ஆராவாரம் செய்து கொண்டிருந்த பல வருட ரசிகரான முதியவரிடம் வந்த ஒரு இளைஞர், “என்னங்கய்யா கைப்புறா பந்தயம்னு சொன்னாங்க ஒரு புறாவைக் கூடக் காணும். முன்பதிவு செஞ்ச எல்லாரும் ஆளுக்கொரு காளையின் கயிற்றை பிடிச்சு நிக்கிறாங்க” என்று கேட்க, அந்த முதியவர், “தம்பி புதுசா.. கைப்புறா பந்தயம்ன்னா கைல புறாவை கொண்டு ஓடுறதுனு நினைச்சீங்களா? அது இல்ல தம்பி.
மாட்டு வண்டி பந்தயத்தில் ஓடுற மாதிரி, நல்லா வேகமா ஓடுற காளைகளில் பெரிய மாடு, சின்ன மாடுனு பிரிச்சு ஓடு மாட்டின் பிடிக் கயிறை பிடிச்சு காளையின் வேகத்துக்கு சாரதியும் (வீரரும்) ஓடணும். குறிப்பிட்ட இலக்கு வரை காளையோடு போய் கயிற்றை விடாம எல்லையை வந்து தொடணும். அது தான் கைப்புறா பந்தயம்.
இதுல நல்ல திடகாத்திரமான காளைகளும், காளையர்களும் தான் பங்குபெற முடியும். முதல்ல ஓடி வரும் காளைக்கும் காளையருக்கும் பரிசு தொகை அள்ளிக் கொடுப்பாங்கப்பா. ஜல்லிக்கட்டு, குதிரை வண்டி, மாட்டு வண்டி, சேவல் சண்டைக்கு ரசிகர்கள் இருப்பது போல கைப்புறா பந்தயத்தை பார்க்கவும் ஆயிரக் கணக்கான ரசிகர்களும் சாரதிகளும் இருக்காங்க.
நானெல்லாம் உங்களப் போல இளவட்டமா இருக்கும் போது காளையை புடிச்சுக்கிட்டு ஓடி பல பரிசுகளை வாங்கிட்டு வந்த ஆளு தம்பி. அப்பெல்லாம் பரிசுன்னா வேட்டி, துண்டு கொடுப்பாங்க. அதை வாங்க எவ்வளவு தூரம் ஓடணும் தெரியுமா? எல்லையை தொடுற வரைக்கும் வேற எந்த சிந்தனையும் வராது. வெற்றி பெற்று மாலையும் வேட்டி துண்டும் வாங்கும் போது நமக்கே தெரியாம வரும் கெத்து இருக்கே அதை அனுபவிச்சா தான் தெரியும் தம்பி. ஆனா இப்ப பரிசு பணத்தை அள்ளிக் கொடுக்குறாங்க” என்றார்.
பெரிய மாடுகள் 5 மைல் தூரமும், சின்ன மாடுகள் 3 மைல் தூரமும் ஓடி வெற்றி பெற்ற காளைகளுக்கு விழாக்குழு பரிசுகளை அள்ளிக் கொடுத்தனர்.