நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
இந்நிலையில் திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர் அவர், ''ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று மோடி நம்பிக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக எடுபடாது. இதுகுறித்து தமிழக முதல்வர் தெளிவாக இன்று பதில் சொல்லிவிட்டார். கேட்கின்ற நிதியை தமிழகத்திற்கு கொடுப்பதற்கு மனம் இல்லாத மோடி, மக்களுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக இப்படிப்பட்ட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஏதோ கச்சதீவை முந்தாநேத்து கொடுத்த மாதிரி, இன்றைக்கு அதைப் பற்றி பேசுகிறார் மோடி.1974-ல் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் கலைஞர் சட்டமன்றத்தில் கச்சதீவை கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்டது மட்டுமல்லாமல் திமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் பேசியவர்களில் நானும் ஒருவன். இந்த வரலாறு எல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை.
50 வருடம் ஆகிவிட்டது ஆகையால் எந்த பொய்யை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில், தோல்வி பயத்தின் காரணமாக இப்பொழுது கலர் கலராக பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நான் கேட்கிறேன் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தாரே இதே இலங்கை தமிழ் இனத்தை அழிக்க நினைத்ததன் விளைவு பிச்சைக்கார நாடாகவே ஆகி விட்டார்கள். பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கைக்கு பிச்சை போட்டவர்தான் பிரதமர். இந்தியாவின் பணம் ஏறத்தாழ 34,000 கோடி ரூபாயை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார். அப்பொழுது கேட்டு வாங்கி இருக்கலாம் அல்லவா கச்சதீவை'' என்றார்.