தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு வழியில்லை என்றும், கடன், வட்டி திவாலுக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப் பேரவையில் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பினாமி அரசால் முடியாது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. வளர்ச்சிக்கு வழி வகுக்காக இந்த நிதிநிலை அறிக்கையால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
நிதிநிலை அறிவிப்பில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கை, பொது நிதிநிலை அறிக்கை ஆகியவற்றை கடந்த மாதம் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டது. தமிழகத்தில் வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் அனைத்து தானியங்களையும் அரசே கொள்முதல் செய்யும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பின்பற்றி, துவரை, உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நல்லத் திட்டமாகும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பருப்பு வகைகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு மக்களுக்கு மலிவு விலையில் விற்க வேண்டும். அதேபோல், விழுப்புரம் மாவட்டம் பெலாக்குப்பம் பகுதியில் 450 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும். இதைத் தவிர பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இல்லை.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கடந்த இரு ஆண்டுகளில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மாறாக, மதுமூலமான வருவாய் அதிகரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால் கூடுதலாக மதுக்கடைகளை அரசு திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி முறியடிக்கும்.
பள்ளிக் கல்வித்துறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்றவாறு நிதியும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட ரூ.273 கோடி மட்டுமே உயர்த்தி பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்பு கொள்முதல் விலை நிர்ணய முறை, அத்திக்கடவு & அவினாசி திட்டம் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு பினாமி அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.
2017-18 ஆம் ஆண்டில் 8.03% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால் அதன் பயன்கள் அனைத்து விஷயங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. 2017-18 ஆம் ஆண்டு ரூ.77234 கோடி வணிகவரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.75264 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மொத்த வரி வருவாயும் ரூ.99590 கோடி என்ற இலக்கிலிருந்து நழுவி, ரூ.98,639 கோடியாக குறைந்து விட்டது. அதேநேரத்தில் பற்றாக்குறைகள் மட்டும் எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. நடப்பு ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ,18,370 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிதிப்பற்றாக்குறை, கடன் ஆகியவையும் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு திட்டமிட்டு மறைத்திருக்கிறது. 2018-19ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.44,480 கோடியாக அதிகரிக்கும், அதை சமாளிக்க ரூ.43,962 கோடி கடன் வாங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 2018-19-ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 55,844 கோடியாக அதிகரிக்கும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழக ஆட்சியாளர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதைத் தான் இது காட்டுகிறது. வரும் ஆண்டில் கடனுக்கான வட்டியாக மட்டும் தமிழக அரசு ரூ.29,624 கோடியை செலுத்தும். மானியங்களுக்காக மட்டும் ரூ.75,723 கோடியை செலவழிக்கும். இந்த இரண்டுக்காக மட்டும் தமிழக அரசு செலவழிக்கும் தொகை ரூ.1,05,347 கோடியாகும். ஆனால், தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,12,616 கோடி மட்டுமே. இந்த வருவாயைக் கூட பினாமி அரசால் ஈட்ட முடியாது என்பதால் வரி வருவாயை விட, இலவசங்களுக்கு அதிக செலவு செய்து சாதனை படைக்கப்போகிறது பினாமி அரசு. இலக்குகளை விட குறைவாக செலவு செய்வதும், அதிக வருவாய் ஈட்டுவதும் தான் நல்ல அரசுக்கு அடையாளம் ஆகும். ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள் தலைகீழாக உள்ளன.
2018-19 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையையும் கருத்தில் கொண்டால் அரசின் மொத்தக் கடன் ரூ. 7 லட்சம் கோடியை எட்டக்கூடும். அதாவது தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கடனை சுமத்தியுள்ளது பினாமி அரசு. பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த நல்ல அம்சங்களைப் பின்பற்றியிருந்தாலே நிதிநிலை அறிக்கை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால், தமிழக அரசு அதை பின்பற்றவில்லை. அதன் விளைவாக திவாலை நோக்கியப் பயணத்தில் தமிழகத்தையும், தமிழக மக்களையும் மேலும் சில அடி முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது பினாமி அரசு. இது மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய சாதனை அல்ல.... வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனை ஆகும். இவ்வாறு கூறியுள்ளார்.