சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும்.
எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானத்தை ஜி.கே.மணி ஆதரிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி நீங்கள் எந்தக் கூட்டணியில் உள்ளீர்கள் என்று தெரியும். எனவே இது குறித்து நீங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள்ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.