காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில், மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமாகிவிட்டார் என அறிக்கை வெளியிட்டது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நாளை (15.12.2024) காங்கிரஸ் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாவது, “மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.