முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் நிர்வாகியும், சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அரசாங்கம் ஒரு முடிவெடுத்து நீதிமன்றம் அதை அங்கீகரித்து சிறையிலேயே நீண்ட நாட்கள் இருக்கின்றவர்களுக்கு ஒரு அளவுகோல் வைத்து 20, 25, 30 வருடம் எனச் சிறையில் இருப்பவர்கள் எல்லாரையும் விடுவதாக முடிவு செய்தால் விட்டு விட்டுப் போகட்டும். அரசாங்கம் ஒரு முடிவெடுத்து இத்தனை வருடங்கள் சிறையில் தண்டனை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று முடிவெடுத்து வெளியே விட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்களுடைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் பேசியிருக்கிறார், அகில இந்தியத் தலைவரும் பேசியிருக்கிறார். நீதிமன்றமோ அரசோ முடிவெடுத்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை'' என்றார்.