திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''தமிழக பாஜக தலைவர் என்னை எம்பி பதிவிலிருந்து நீக்க வேண்டும் என சொல்லியுள்ளார். நான் கேட்கின்றேன் ஆட்களை அழைத்துக் கொண்டு சென்று மலையில் பிரியாணி சாப்பிட்டார் என்று சொன்ன தமிழக பாஜக தலைவர் அதை நிரூபிக்கவில்லை என்றால் பதவி விலகுவாரா? கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு மலைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டதாக சொன்னால் நான் பதவி விலக தயார். அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால் தமிழக பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து விலக தயாரா?
உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொய்களை தொடர்ந்து தமிழகத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் கொண்டிருப்பவர் தமிழக பாஜக தலைவர். ஐபிஎஸ் படித்தும் பொய்தான் பேசிக் கொண்டிருக்கிறார். லண்டனுக்கு படிக்க சென்றபின் கூடுதலாக எல்லோரும் நம்புற மாதிரி எப்படி பொய் சொல்ல வேண்டும் என்பதில் தேர்ச்சி பெற்றவராக உள்ளார்.
எம்.பி முதலில் மேலே போனாரா? அதை நிரூபிப்பாரா? பத்திரிகையாளர்கள் இருந்தார்கள் காவல் துறையினர் இருந்தனர். அவருடைய கட்சியைச் சேர்ந்த பாஜகவினர், இந்து முன்னணி கட்சியினர் இருந்தனர். நான் மேலே போகவே இல்லை. கீழே சென்று மேலே செல்பவர்களுக்கு என்னென்ன தடைகள் இருக்கிறது; என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்பதை பார்க்க போனேன். அதிலும் ராமநாதபுரமும் எம்பி எதற்காக போனார்; மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அங்க எதுக்கு போனார் என கேட்கிறார்கள்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் வக்ஃப் வாரியத்தின் உறுப்பினராக இருக்கிறார். நான் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருக்கிறேன். அங்கு மேலே இருக்கின்ற சிக்கந்தர் தர்கா வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு அவர்களுக்கு என்ன சிரமங்கள் இருக்கிறது; என்ன கட்டுப்பாடுகள் இருக்கிறது அதை அரசிடம் சொல்லி எப்படி கேட்டுப் பெற வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. அதற்காக நாங்கள் போனோம்.
நல்லிணக்கத்திற்காக, ஒற்றுமைக்காக தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய வரலாறு எல்லோருக்கும் தெரியும். பாஜகவின் வரலாறும் எல்லோருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் பாஜகவின் அத்தனை தலைவர்களும் பொய்களை பரப்பி வருகின்றனர். தர்காவிற்கு போனவர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்களா? சைவம் சாப்பிடுகிறார்களா? என இவர்கள் ஏன் கேள்வி கேட்கிறார்கள்.
கோவிலுக்கு போகவில்லை தர்காவிற்கு போகிறார்கள். கோவில் வளாகத்தில் பிரியாணி சாப்பிடவில்லை. தர்காவிற்கு ஆண்டாண்டு காலமாக அங்கே ஆடு, கோழி அறுத்து சாப்பிட்டு கொண்டு இருப்பவர்கள். ஆனால் இப்போது தடை இருப்பதாக சொன்னார்கள். அதை தான் பார்க்கச் சென்றோம். காவல்துறையினர் இப்போதைக்கு ஆடு, கோழி கொண்டு போய் மேலே அறுப்பதற்கு தடை இருக்கிறது சமைத்த உணவுகளை கொண்டு சென்று சாப்பிட தடை இல்லை என்றனர். சாப்பிட்டவர்கள் புகைப்படங்களை பகிர்ந்தார்கள். அந்த புகைப்படத்தை நானும் பகிர்வேன். சமைத்த உணவை அங்கு கொண்டு சென்று சாப்பிடுவதில் எந்த தடையும் இல்லை. காவல்துறை தடுக்கவில்லை. இது காவல்துறை அனுமதிக்க கூடிய விஷயம். காவல்துறை ஆடு கோழி கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. அனுமதி மீறி யாரும் அங்கு போய் சாப்பிடவில்லை. அசைவ உணவு கொண்டு செல்வதற்கு தடை கிடையாது''என்றார்.