இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்ஃப் வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காக 1954ஆம் ஆண்டி வக்ஃப் சட்டம் கொண்டுவரப்பட்டு, 1958ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்று முதல் வக்ஃபு சட்ட விதிகளின்படி, வக்ஃபு வாரிய சொத்துக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்ஃபு வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன.
அப்போது இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பா.ஜ.க எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான இந்த கூட்டுக்குழுவில், மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் என பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுக்குழு கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்ய தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளி காரணமாக ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.