Skip to main content

'14 மாதங்களில் 18-ஆம் பலி; எப்போது தான் தடுத்து நிறுத்தும் தமிழக அரசு?'-ராமதாஸ் கேள்வி

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
'18th death in 14 months; When will the Tamil Nadu government stop it?'- Ramadoss asked

நாகர்கோவிலில் தீயணைப்பு வீரர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில் மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கருப்பசாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 17 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த கருப்பசாமி ரயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தீயணைப்பு வீரர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

'18th death in 14 months; When will the Tamil Nadu government stop it?'- Ramadoss asked

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது காரணமாக கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டதால், அவருடைய மனைவியும், குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாதது தான் காரணமாகும்.14 மாதங்களில் 18 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துள்ளனர்.

பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது.  ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆண்டு நவம்பர்  10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த  டிசம்பர் மாதம் வரை  17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  நடப்பாண்டில் முதல் தற்கொலை கருப்பசாமி ஆவார்.

ஆன்லைன் சூதாட்ட  தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும்,  தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும்.  ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 18 பேர் தற்கொலை  செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை  தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை  விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்