தென்காசி மாவட்டத்தின், ஆலங்குளம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா. இவர், தொகுதியில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஆஜாராகி மக்களுக்கான நிவாரணங்களைச் செய்பவர். இவரும் தி.மு.க.வின் தெற்கு மா.செ.வான சிவபத்மநாபனும் நேர் எதிராக உள்ளவர்கள். ஆனால், தொகுதியில் இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பூங்கோதை .
இந்த நிலையில், பூங்கோதை மக்கள் பணியில் முன் நிற்பதால், வரும் தேர்தலில் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். அதே சமயம், மா.செ.வான சிவபத்மநாபன் தான் இருக்கும் தென்காசி தொகுதி ஒத்துவராததால், பூங்கோதையின் ஆலங்குளத்தைக் குறி வைத்துத் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொகுதியில் கட்சி மீட்டிங் என்றாலும் எம்.எல்.ஏ என்ற வகையில், பூங்கோதையை அழைப்பதில்லையாம். மீட்டிங் பற்றி பூங்கோதை அறிந்து, பின் தானே வலியப் போய்க் கலந்து கொள்ளும் குணமுடையவர்.
மா.செ.சிவபத்மநாபன் அண்மையில் பூங்கோதையின் தம்பி எழில்வாணனைக் கொண்டு அவருக்கெதிரான அரசியலை நடத்தியிருக்கிறார். நவ.15 அன்று தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களின் கூட்டத்தை ஆலங்குளத்தில் நடத்தினார் சிவபத்மநாபன். இந்தக் கூட்டத்திற்கான செலவை எழில்வாணனே ஏற்றிருக்கிறார். இந்தக் கூட்டத்திலும் கட்சி என்ற அடிப்படையில் பூங்கோதை வந்து கலந்துகொண்டாலும், மா.செ அவரைப் பொருட்படுத்தவில்லையாம். மேலும், நவ.18 அன்று கடையத்தில் நடந்த தி.மு.க பூத்கமிட்டி கூட்டத்திற்கும் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ என்ற வகையில் பூங்கோதையை அழைக்கவில்லையாம். ஆனாலும், கூட்டத்திற்குச் சென்ற பூங்கோதைக்கு, அங்கு மேடையில் சேர் போடவில்லை. அதில், ஒருவர் பூங்கோதைக்கு எதிராகவும் பேசியுள்ளாராம்.
மேடையில் சீட் கிடைக்காத பூங்கோதை கீழே தொண்டர்களுடன் அமர்ந்திருக்கிறார். கூட்டத்தில் தன்னைப்பற்றிப் பேசவைத்ததால் மன விரக்தியில் வெளியேறியிருக்கிறார் பூங்கோதை. அன்று இரவு பிரச்சனைகளால் மன அமைதியின்றி தவித்தவர், உடல் நலக் குறைவால், மறுநாள் காலை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது தேறிவருகிறாராம். இதனால், பல்வேறு விதமான தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.
எம்.எல்.ஏ பூங்கோதையின் உதிவியாளரான ரஞ்சித்திடம் பேசினோம். அப்போது, "உட்கட்சி அரசியல் பகை காரணமாக மேடத்தின் குடும்பத்தில் சில பிரச்சினை. சில சம்பவங்கள் திட்டமிட்டு அவருக்கு எதிராக நடத்தப்படுவதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்குப் பின்பு மேடம் நன்றாக இருக்கிறார்" என்றார்.