புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா காலத்தில் தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊதியமாக இரட்டிப்பு சம்பளத்தை மூன்று மாதத்திற்குக் கணக்கீடு செய்து வழங்கவேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட 15 இடங்களில் அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க தேனி வடக்கு மாவட்டப் பொருளாளர் தங்க தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். தேனி பள்ளிவாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தவர்கள் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள நேரு சிலை சந்திப்பில், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டனக் கோஷங்கள் எழுப்பினர். 30 நிமிடத்திற்கு நீடித்த சாலை மறியலால் தேனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், பேசிய தங்க தமிழ்ச் செல்வன், இந்தப் போராட்டத்தின் மூலம் மத்திய பா.ஜ.க மற்றும் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசை அகற்றுவதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டிருப்பதாகவும், வருகிற தேர்தலில் இந்த அரசு தோல்வியைச் சந்திக்கும். தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
இந்த மறியலில் ஈடுபட்ட தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கத்தினர், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர்.