Published on 05/06/2018 | Edited on 05/06/2018
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராசராச சோழன் பட்டத்தரசி ஒலோகமாதேவி சிலைகள் காணாமல் போய் 60 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்திலிருந்து மீட்டு வரப்பட்டதை வரலாற்று ஆய்வாளர்களும் பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர்.
மீட்க போராடிய சான்றுகளை கொடுத்த ஆய்வாளர்கள் மீட்டு வந்த போலிசார்க்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்லி வருகிறார்கள். மேலும் 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்துள்ள சிலைகளை காண வழக்கத்தைவிட அதிகமான பார்வையாளர்கள் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமை மாலை இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயில் சிற்பம் சேதமடைந்தது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதியில் பல மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை கனமழை பெய்தது. அப்போது, சில முறை பலத்த சப்தத்துடன் அடுத்தடுத்து இடி இடித்தது.
இதில், தஞ்சாவூர் பெரியகோவில் நுழைவுவாயில் உள்ள கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தில் இடி விழுந்ததாகத் தெரிகிறது. இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சுதைச் சிற்பமான வலது புற கீர்த்தி முகத்தில் சிறு பகுதி சேதமடைந்தது.
சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. சில கற்கள் மட்டும் கீழே விழுந்துள்ளது. அப்போது, இக்கோபுரத்தின் அருகில் உள்ள அறைகளில் குளிர்சாதனப் பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன், மின் சாதனப் பொருட்களும் சேதமடைந்துள்ளது.
இதே போல கடந்த 2010 ம் ஆண்டு ராஜராஜன் நுழைவு வாயிலில் இடி தாக்கி கலசம் சேதமடைந்தது, 2011 ம் ஆண்டு பெருவுடையார் சன்னதியில் இடி தாக்கி விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்போது கேரளத்தகன் நுழைவாயிலில் இடி தாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.