தஞ்சையில் வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சியிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு ஈச்சர் மினி லாரி வாகனம் ஆஸ்பெட்டாஸ் சீட் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் அருகே உள்ள பூதலூர் வெண்ணாற்று பாலம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபொழுது அடையாளம் தெரியாத வாகனம் லாரியின் பின் பகுதியில் மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறிய லாரி பாலத்தின் கரை பகுதியை உடைத்துக்கொண்டு ஆற்றினுள் தலைகுப்புற விழுந்தது. லாரி தலை குப்புறக் விழுந்ததில் வாகனத்தில் பயணம் செய்த மைதீன்கான், அசோகன், கருப்பசாமி, நிஸாய், சக்தி ஆகிய நால்வரும் நீந்தி கரை ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் பயணித்த கார்த்தி என்ற நபர் மட்டும் லாரியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துச் சம்பவம் அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றதால் யாரும் உடனடியாக கண்டுகொள்ளவில்லை. தற்பொழுது திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிக பாரம் கொண்ட ஆஸ்பெட்டாஸ் சீட் ஏற்றிவந்ததால் உடனடியாக வாகனத்தை மீட்க முடியவில்லை. இதற்காக ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 4 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன கார்த்தி என்ற நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.