நக்கீரன் குடும்பத்தின் சார்பில் பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது!
ஆறுபடை வீடு வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு வருகிற 8- ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற இருப்பதால் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், திருச்சி, மதுரை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பழநி முருகனை தரிசித்து செல்கிறார்கள்.
பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு சாலை வழி நெடுகிலும் அங்காங்கே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில் உள்ள நக்கீரன் குடும்பத்தினர் வருடம் தோறும் பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள பழனி சாலையில் பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்த முருக பக்தர்களுக்கு பொங்கல், வாழைப்பழம், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை அன்னதானமாக வழங்கினார்கள் நக்கீரன் குடும்பத்தினர். அன்னதானத்தை முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.