வரும் கல்வியாண்டு முதல், தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியைப் பயில்வதற்கான நடைமுறையைக் கொண்டுவர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியைப் பயிற்றுவிக்க ஐ.ஐ.டி உள்ளிட்ட சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை தாய்மொழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். குறிப்பாக இந்தியிலும், தமிழ் மொழியிலும் தொழில்நுட்பக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவந்து நிலையில், தற்பொழுது மத்திய அரசு இந்த நடைமுறை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
சட்டப் படிப்புகளைத் தாய்மொழியில் கற்கமுடியும் பொழுது ஏன் தொழில்நுட்பக் கல்விகளைத் தாய்மொழியில் பயில நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. தொடர்ச்சியாக இதுகுறித்து மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்ட நிலையில், தற்பொழுது தொழில்நுட்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.