
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் துண்டுப் பிரசுரம் வழங்கினர்.
ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் ஈரோடு, ஸ்டோனி பாலம், அண்ணா நகர், சாந்தாங்கருக்கு மற்றும் கிராமடை ஆகிய பகுதிகளில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பிரச்சாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளான இலவச சீருடை, இலவச நோட்டுப் புத்தகங்கள், ஆங்கில வழிக் கல்வி மற்றும் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்துக் கூறியும், அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை வலியுறுத்தியும் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதன் பயன்கள் போன்றவற்றை எடுத்துக் கூறியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், அதுகுறித்த துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. தற்போது எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தில் ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.