புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகில் உள்ள மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது சிவக்குமார். வம்பன் 4 ரோட்டில் பகவான் டீ ஸ்டால் என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த கஜா புயல் நேரத்தில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதிப்படைந்தபோது விவசாய கடன், சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்த நேரத்தில் சிவக்குமார் தனது கடையில் சாதாரண விவசாயிகளின் ரூ. 28 ஆயிரம் கடன் தொகையை தள்ளுபடி செய்தார். அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு கரோனா காலத்தில் ஒரு தேநீர் மொய் விருந்து நடத்தி அதில் கிடைத்த தொகை ரூ.14 ஆயிரத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது.
தற்போது புதுக்கோட்டை கேப்பரையில் ஒரு டீக்கடையை திறந்துள்ள சிவக்குமார், தற்போது விலைவாசி உயர்வால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் விதமாக மீண்டும் ஒரு தேநீர் மொய்விருந்து நடத்தினார். இந்த விருந்தில் தேநீர் குடிக்க வந்த வாடிக்கையாளர்கள் அவர்களால் இயன்ற பணத்தை மொய் சட்டியில் போட்டுச் சென்றனர். மாலையில் மொய் சட்டியை பிரித்து எண்ணப்பட்ட போது ரூ.16 ஆயிரம் வசூலாகி இருந்தது. இந்த தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறியுள்ளார் சிவக்குமார்.