Skip to main content

வராகநதியை தூய்மைப்படுத்தும் பணி; துணை முதல்வர் ஓபிஎஸ் துவக்கி வைத்தார்...

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் ‘வராகநதியை காப்போம்’ திட்ட பணிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தின் ஊரின் நடுவே என்றும் வற்றாத வராகநதி ஓடுகிறது. வராகநதியின் கரையை வைத்து ஒரு புறம் தென்கரை, மறுபுறம் வடகரை என்று அழைக்கப்படுகிறது. காசிக்கு அடுத்தாற்போல் வராகநதியின் ஒரு கரையில் ஆண் மருத மரமும், மறு கரையில் பெண் மருத மரமும் உள்ளது மிக சிறப்பு வாய்ந்தது என்று ஏராளமான ஆன்மீகவாதிகள், பக்தர்கள் புனித நீராடி வந்தனர். 

 

மேலும் வராகநதியின் தென் கரையில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் என மூன்று சன்னதிக்கும் தனித்தனி கொடிமரம் கொண்டு சிறப்பு வாய்ந்த பெரிய கோவில் என்று அழைக்கப்படும் திருத்தலம் உண்டு. மேலும் சுமார் 30 கிலோ மீட்டர் பயணிக்கும் வராகநதியை கொண்டு 3,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும் பெறுகிறது. கரைகளின் மணல் பரப்பில் பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் பொதுக்கூட்டங்களும் நடந்ததுண்டு. இவ்வளவு சிறப்புவாய்ந்த வராகநதி இன்று, கழிவு நீர் கலந்தும், குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறி மாசடைந்து துர்நாற்றம் வீசும் இடமாகவும், கொசு உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறியுள்ளது.

 

மாசடைந்துள்ள வராகநதியை தூய்மைப்படுத்திட வேண்டும் என்று தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்றம் உள்ளிட்ட  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் துணை முதல்வரிடம் கோரிக்கைவிடுத்தனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில் கடந்த வாரம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார்  தலைமையில் ‘வராகநதியை காப்போம்’ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து நேற்று அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பெரிய கோவில் படித்துறையில் வராகநதியை தூய்மைப்படுத்தும் பணியை கழக ஒருங்கி ணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், மாவட்ட ஆட்சி தலைவர் பல்லவி பல்தேவ், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ்,  பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கள்ளிப்பட்டி சிவக்குமார், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்