உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.
இந்தச் செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அதே வேளையில், இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, நகைச்சுவை கேளிக்கைக்காக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர்களை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைப்பெற்று கொண்டிருப்பதால், குறிப்பாக அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்யும் வகையில், இந்த ஏ.ஐ.யை பயன்படுத்தி மீம்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றன.
இந்த மீம்ஸ் கலாச்சாரத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், பிரதமர் மோடி குறித்து கேளிக்கை வீடியோக்கு அவர் பதில் அளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பயன்படுத்தும், எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், இணையவாசி ஒருவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி நடனமாடும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஆரஞ்சு நிற மேல்சட்டை அணிந்துள்ள பிரதமர் மோடி நடனம் ஆடியவாறு பிரமாண்ட மேடைக்கு வந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஆடியவாறு உள்ளது. மேலும், ‘சர்வாதிகாரி இதற்காக என்னைக் கைது செய்யப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.’ என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில் அவர், “உங்களைப் போலவே, நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு காலத்தில் இத்தகைய படைப்பாற்றல் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது!” என்று குறிப்பிட்டு வரவேற்பு அளித்துள்ளார்.
Like all of you, I also enjoyed seeing myself dance. 😀😀😀
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R— Narendra Modi (@narendramodi) May 6, 2024