மே.3 அன்று அந்திநேரம், நெல்லை மாவட்டத்தின் திசையன்விளைப் பக்கம் உள்ள கரைச்சுத்துப் புதூரைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசின் தலைவரான கே.பி.கே.ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
தனது தந்தையான காங் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மே 2ம் தேதியன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் ஏப் 30 அன்று அவர் தன் கைப்பட எழுதி வைத்த மரண வாக்குமூலத்தின் கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். காணாமல் போனவர் மாவட்ட காங். புள்ளி. பரபரப்பான தலைவர். மேலும் அவர் தன் மரண வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்த போலீசார் உடனே தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்.
இதற்கிடையே மறுநாள் காலை ஜெயக்குமாரின் வீட்டினருகேயுள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்யும் கணேசன் என்பவர் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அந்தப் பகுதியின் குட்டை ஒன்றில் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து பதறியுள்ளார். பின்பு அவர் கொடுத்த தகவலினடிப்படையில் அந்தப் பகுதிக்கு, டி.எஸ்.பி. யோகேஸ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஸ்யாம் சுந்தர், ஆனந்த் குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்திருக்கிறார்கள். அதையடுத்து மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனும் வந்திருக்கிறார்.
கை கால்கள் வயர்களால் கட்டப்பட்டு கரிக்கட்டையாய் எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தை ஆராய்ந்தவர்கள் அங்கே கிடந்த சில தீப்பெட்டிகள், பிளேடு, ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவைகளையும் தடயவியல் வல்லுநர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்பட்ட தகவல் அரசியல் வட்டாரம் மட்டுமன்றி தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. இந்தக் கொடூரக் கொலைக்கு யார் காரணம். எப்படி நடந்தது. குறிப்பாக கி. மாவட்டத்தில் அரசியல் பதற்றம் உச்சகட்டத்தில் உள்ளது.
கே.பி.கே. ஜெயக்குமார் கரைச்சுத்துபுதூரின் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். பரம்பரை காங்கிரஸ் குடும்ப வழி. தலைவர் கே.எஸ். அழகிரியால் நெல்லை கி. மாவட்ட காங். தலைவரானவர். காண்ட்ராக்ட், கன்ஸ்ட்ரன்ஷன், கல்குவாரி போன்ற தொழில்களை நடத்துபவர். கிராமத்தின் தனியொரு ஒதுக்குப்புறமான இடத்தில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கி, வீடு அமைத்தவர் பின் பக்கம் தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்திலேயே வீட்டின் பின்புறம் சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளம் போன்ற சிறு குட்டை ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்திருக்கிறார். தவிர அங்கிருந்து பார்த்தால் அந்த இடம் பார்வையில் படாமல் சமதளம் போன்று தெரியும். அத்துடன் அவரின் வீடிருக்கும் இடமோ தனியாக அமைந்திருக்கிற கிராமத்தின் முகப்பு பகுதி. அதையடுத்து சற்று தொலைவில் அந்தச் சிறிய கிராமமும் உள்ளது.
ஒரு வகையில் பார்த்தால் ஜெயக்குமாரின் வீடிருக்கும் ஏரியா ஆள் நடமாட்டமற்ற பகுதி. நடந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதி சீட் பெறும் நோக்கில் சென்னையில் முகாமிட்டிருந்த ஜெயக்குமாருக்கு அந்த வகையில் கணிசமான தொகை செலவானதாம். தவிர, தனக்கு அல்லது தனது நண்பருக்கு வேட்பாளர் வாய்ப்பு என்று முயற்சி செய்ததில் கனமான தொகை காலியானதால் கடனாளியானாராம். இதன் விரக்தி காரணமாக தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயக்குமாரை கே.வி. தங்பாலுவும், ஸ்ரீவல்லப பிரசாத்தும் சமாதானம் செய்து தேர்தல் வேலையில் ஈடுபட வைத்திருக்கிறார்கள். அதன் பொருட்டும் சில லட்சங்கள் செலவானதும் கடன் சுமையை ஏற்றியுள்ளது.
அத்தோடு வாக்குப் பதிவு நெருங்கும் சமயம், கடன் தொடர்பானவர்களும் நெருக்கடி கொடுக்க சில முடிந்து போன பழைய கணக்குகள் தொடர்பாக பணத்தைக் கேட்க பல மிரட்டல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போன் கால்களும் ஜெயக்குமாருக்கு வந்திருக்கிறதாம். ஆனால் அவைகளை வெளியே சொல்லாமல் மன உளைச்சலிலும், உயிர் பயத்திலுமிருந்திருக்கிறார். அத்தோடு இரவு வேளைகளில் தன் வீட்டினருகே சந்தேகப்படும்படியான மர்ம நபர்களின் நடமாட்டம் தெரிய வெளியே வந்து அதனை நோட்டமிட்டிருக்கிறார். இதனையடுத்தே மனதைத் திடப்படுத்திக் கொண்ட ஜெயக்குமார் தன் மரண வாக்குமூலமாக தனக்கு விடப்பட்ட அச்சுறுத்தல், மிரட்டல், போன்றவைகளையும் அதற்கான சம்பவங்களையும் கோர்வையாக கட்சி லட்டர் பேடில் ஏப் 30 அன்று மாவட்ட எஸ்.பி.க்கு எழுதியவர், அதனை எஸ்.பி.க்கும் அனுப்பிவைத்திருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகே அவரது தோட்டத்திலேயே கை கால்கள் கட்டப்பட்டு மிகக் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலக் கடிதமும் வெளிவர அதிர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டது. அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவிக்க மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனோ, ஜெயக்குமார் எழுதிய கடிதம் தனக்கு நேரிலோ மின்னஞ்சல் மூலமாகவோ வரவில்லை. அவரது மகன் மே 3 அன்று காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் காவல்துறை செயல்பட்டிருக்கிறது. விரைவாக காரணமானவர்களைக் கண்டறிய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை விரைவாகியிருக்கிறது. போலீசாரின் விசாரனையில்தான் அனைத்தும் தெரியவரும் என்று பேலன்ஸ் பண்ணினார் எஸ்.பி.
மரண சாசனமாக ஜெயக்குமார் பதிவு செய்துள்ள உயிருக்கு அச்சுறுத்தல்களில் ஆறு முக்கியமானவைகளில் ஒன்று மட்டுமே அரசியல் தொடர்பானது. மீதமுள்ள அனைத்தும் தனிப்பட்ட வலுவான மோட்டிவ்கள் என்று விசாரணைத் தரப்பில் பேச்சுமிருக்கு என்கிறார்கள்.
வள்ளியூர் பக்கமுள்ள அந்தப் புள்ளிக்கு 18 வருடங்களுக்கு முன்பு 46 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். அதற்காக அவரின் 7.80 ஏக்கர் நிலத்தை எனக்கு எழுதிக் கொடுத்தார். காலப் போக்கில் நிலத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிட்டதால் வாங்கிய அந்தத் தொகையைத் தந்துவிடுகிறேன். நிலத்தை திருப்பித் தந்துவிடு என்று வற்புறுத்தி எனக்கு நெருக்கடி கொடுத்தார். நிலத்தை உன் மகன் பெயருக்கு மாத்திட்ட. நா மும்பைல பெரிய ரவுடி. நிலத்தக் குடுக்கலன்னா உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஆபத்துன்னு நேரில் கொலை மிரட்டல் விடுத்தவர் சிலரை வைத்து தன் மீது வழக்குப் போட்டு நெருக்கடி கொடுக்கிறார். அவரால் என் உயிருக்கு ஆபத்து.
குத்தாலிங்கம் என்வருக்கு 14 வருடம் முன்பு வாங்கிய கடனை வட்டியுடன் நான் கொடுத்துவிட்டேன். ஈடாக நான் கொடுத்த காசோலைகளைத் திரும்பக் கேட்டும் தரமறுக்கிறார், தனியார் பள்ளியில் கட்டிடம் கட்டிய வகையில் 30 லட்சம் பாக்கியை தாளாளர் தரமறுக்கிறார். இவர்களிடம் தருமாறு கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
அக்ரீமெண்ட் போட்டு நடத்தப்பட்ட குவாரியில் என்னுடைய 24 லட்சம் பெறுமான தார் பிளாண்ட்டைக் கழற்றி விற்றுவிட்டார் அந்தப் புள்ளி. அந்தத் தொகையை தான் கேட்டும் தரமறுக்கும் குவாரி அதிபர் ஆளைவைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
மூன்று வருடமாக எம்.எல்.ஏ.வுக்கு (ரூபி மனோகரன்) பல லட்சம் கொடுத்தேன். அவர் சொன்னபடி எனக்கு காண்ட்ராக்ட் தரலை. தேர்தலில் நான் செலவு செய்த 8 லட்சம் மற்றும் பிரச்சாரத்திற்கு வந்த அத்தலைவருக்கு ( தங்க பாலு) 11 லட்சம் என்று கொடுத்தேன். எம்.எல்.ஏ. திருப்பித் தருவார் என்று தலைவர் சொன்னதால் அந்தத் தொகையை நான் திரும்பக் கேட்டால் மிரட்டுகிறார்கள்.. என்று தன் மரணவாக்குமூலத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் பற்றி ஜெயக்குமார் பதிவிட்டிருக்கிறார்.
தவிர அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் இந்த மரண சாசனத்துடன் தனக்குள்ள கடன் பற்றியும் அதனால் ஏற்பட்ட கடும் நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் பற்றியும் ஜெயக்குமார் எழுதிய தனிக்குறிப்பையும் சேர்த்தே கொடுத்திருக்கிறார். இதையடுத்தே இரண்டாம் நாள் குலை நடுக்கமெடுக்கிற லெவலுக்கு கர்ண கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டு கரிக்கட்டையான ஜெயக்குமாரின் உடலை மீட்டிருக்கிறார்கள் போலீசார். உயிருக்கு அச்சுறுத்தலான இது போன்ற மாஸிவ் அட்டாக்குகளே சம்பவத்திற்கு காரணம் என்கிறார்கள் ஏரியாவாசிகள்.
கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் ஜெயக்குமார். இரண்டு பேர் சேர்ந்து கூட அவரை சாதாரணமாக மடக்கிவிட முடியாத அளவுக்கு தேர்ந்தவர். அப்படிப்பட்டவருக்கு இப்படியா? என்று வேதனைப்பட்டார் அவரோடு நெருங்கிப் பழகியவர்.
நாம் பல்வேறு தரப்பில் நுணுக்கமாக விசாரித்ததில், மே 2ம் தேதியன்று மாலை ஆறு மணியளவில் தனது காரில் வெளியில் சென்ற ஜெயக்குமார் பின்னர் இரவில் வீடு திரும்பியிருக்கிறாராம். ஆனால் அவரது கார் உள்ளே நிறுத்தப்படாமல் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தது புதிராக உள்ளது. அவரை நோட்டமிட்ட புள்ளிகள் வீட்டிற்கு முன்பாகவே ஜெயக்குமாரை மடக்கிக் கடத்தியிருக்கலாம். அவரது பண்ணை வீட்டின் பின்புறமே இந்தக் கோரத்தை நிகழ்த்தியிருக்கலாம். நிச்சயம் இதில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பிருக்கலாம். அவர்கள் கூலிப்படையினராகவுமிருக்கலாம் என்கிற தகவலும் பரவுகின்றது.
ஜெயக்குமார் தன் மரணப் பதிவில் அரசியல், எம்.எல்.ஏ. பற்றி பதிவிட்டிருப்பதால் அரசியல் வட்டாரங்கள் அதிர்ந்த நேரத்தில் எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரனோ எனக்கும் ஜெயக்குமாருக்கும் எந்தவித வரவு செலவும் கிடையாது. நானும் அவரும் அண்ணன் தம்பிகள் போல பழகி வந்தோம். இருவரும் இணைந்தே தேர்தலில் பணியாற்றினோம். என்னை இதில் சிக்கவைக்க பின்புலத்தில் யாரோ வேலை செய்கிறார்கள். இதுகுறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் காங். தலைவர் தங்கபாலுவோ, ஜெயக்குமாரின் கடிதத்தை பேலீசார் தீவிரமாக ஆராய வேண்டும். எழுதிய கடிதம் அவரது கையெழுத்துத் தானா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார்.
ஜெயக்குமார் கொலையானதில் கொதித்துப் போயிருக்கும் காங்கிரசார் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிற வரையில் அவரது உடலைப் பெறமாட்டோம் என்று தெளிவுபடுத்தியவர்கள், நெல்லையிலும், அம்பையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.
நாம் இது குறித்து மேலும் விபரங்கள் அறிய மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனை தொடர்பு கொண்ட போது அவரோ விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று முடித்துக்கொண்டார்.
அரசியல் காரணமா. தனிப்பட்ட மோட்டிவ்களா? காலம் தாழ்த்தாமல் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது காவல் துறை.