simbu joined in kamal maniratnam thug life movie

கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’.இப்பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கடந்த ஆண்டு கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

Advertisment

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. இப்படத்தில் கமல் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இப்படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

Advertisment

இதையடுத்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருவதாகவும் கமல், சிம்பு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சிம்பு நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. அவர் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்து அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இதன் மூலம் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.