Skip to main content

இருளில் தவிக்கும் கிராம மக்கள். ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு....நள்ளிரவில் கைது!!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையுயூர் கிராமத்தில் கஜா புயலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையிலும் இன்னும் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கிறார்கள் மக்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அந்த கிராம மக்களை மாவட்ட நிர்வாகம் வஞ்சிப்பதாக இன்று தஞ்சை வரும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்திருந்தனர் கிராம மக்களும் விவசாயிகளும். இந்த நியைில் தான் நள்ளிரவில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

tanjore issue


விவசாயிகளை கைதுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது "தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவிற்க்கான மின்சார இணைப்புகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜாபுயல் தாக்குதலால் மின்கம்பங்கள் விழுந்து சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அதனை சீர்படுத்தப்படாமல் இருளிலேயே விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் கொடுமை தொடர்கிறது .

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர் நடவடிக்கை மேற்க்கொண்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்சார துறை, காவல்துறையினர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. வருவாய் துறை மூலம் நில அளவை செய்து சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுக்க மின்சார வாரிய தலைவரும் சிறப்பு அனுமதி வழங்கி பணி துவங்கிய நிலையில் தனிநபர் சிலரை துண்டி விட்டு ஆளும் கட்சியினர் சிலர் செய்யும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதால் மின் இனைப்பும் வழங்காமல், சாலை போக்குவரத்து இன்றி ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூர் வாரும் பணிகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தட்டிக் கேட்கும் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது ஆளும் கட்சியினர் சிலரின் தூண்டுதலால் தாக்குதலும் நடத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டு பலரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, சிறையிலும் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளும் கட்சி பிரமுகர்களின் அச்சுறுத்தலால் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகம் தயக்கம்காட்டி வருவதோடு, மின் கொடுக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி தருவதாக உயர் அதிகாரியே தெரிவிப்பது வேதனையளிக்கிறது.

எனவே இதனை கண்டித்தும், தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி இயற்க்கை சீற்றங்கள் ஏற்ப்படும் நிலையில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி பாதிக்கும் வேலையில் தீபாவளி நெருங்கி வரும் வேலையில் உடன் மின் இணைப்பு வழங்கி, சாலை அமைத்து வெளிச்சம் கொடுத்து விவசாயக் குடும்பங்களை பாதுகாத்திட வலியுறுத்தி இன்று (22ம்) தேதி தஞ்சாவூர் வருகை தர உள்ள மேதகு ஆளுநர் பண்வரிலால் புரோகித் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தினை நடத்திட பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிவித்து தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் மின் இணைப்பு கொடுக்க மறுத்து மக்களை யாருக்காகவோ அஞ்சி இருளிலே தவிக்க விட்டு உயிருக்கு பயந்து ஓர் ஆண்டு காலமாக போராடி வரும் மக்களுக்கு மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களின் செயல் மனிதநேயமற்ற செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கதுமாகும். மேலும் இருளிலே வாழும் குடும்பங்களுக்கு உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமேயானால் மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும்.


இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய ஆட்சியர் மனிதாபிமானமற்ற முறையில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்த விவசாயிகளையும் மாவட்ட செயலாளர் எம்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையை தூண்டி விட்டு நள்ளிரவில் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பறி தவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடன் தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்வதோடு, உடன் மின் இணைப்பு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளக்கேற்றி உயிருக்கும், வாழ்க்கைக்கும் உத்திரவாதமளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதனை தங்கள் பத்திரிக்கை ஊடகங்களில் உடன் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்" இவ்வாறு
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்