நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 25 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் 3 மாணவர்கள் பி.டி.எஸ் படிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சீட்டு கிடைத்துள்ளது. இதில் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ஜனார்த்தனனுக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், மாணவன் ஜனார்த்தனன் நம்மிடம் கூறும் போது, “அன்றாடம் வீட்டுக்கு வீடு பால் வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்த நான் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பல நாட்கள் காலையில் அம்மா உணவு தயாரித்துக் கொடுத்துவிடுவார். சில நாட்கள் வீட்டில் உணவு கிடைப்பது அரிது. ஆனால் பள்ளிக்கு வந்தால் மதிய உணவு கிடைக்கும். 10 ம் வகுப்பு வரை அதனைச் சாப்பிட்டு தான் படித்தேன். அதுவரை பசி கொடுமை தெரியவில்லை. +1 சேர்ந்த பிறகு உங்களுக்கு மதிய உணவு இல்லை என்று சொன்ன போது தான் என்னைப் போன்ற ஏழ்மை நிலையில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும் மதியம் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சாப்பிட்ட பிறகு மிஞ்சும் உணவை ஆசிரியர்கள் +1, +2 மாணவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் சங்கடமான நிலையில் சாப்பிடுவோம்.
பல நாட்கள் காலை உணவும் இன்றி மதிய உணவும் கிடைக்காமல் பசியோடு வகுப்பில் இருக்கும் போது ஆசிரியர்கள் நடத்தும் பாடம் எங்களுக்குப் புரியாது. இதனாலேயே நல்லா படித்த மாணவர்கள் கூட மதிப்பெண் குறைவாக வாங்கினார்கள். அத்தனை கொடியது பசி நோய். மேலும் காலையில் சிறப்பு வகுப்பு, மாலையில் சிறப்பு வகுப்பு என 12 மணி நேரம் பள்ளியில் பசியோடு இருப்போம். மதியம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வரலாம் என்றாலும் வகுப்புகள் தொடங்கிவிடும். அதனால் தான் நான் +2 படிக்கும் போது கூட நக்கீரன் மூலமாக அரசுப் பள்ளிகளில் +2 வரை மதிய உணவை வழங்குங்கள் என்று அரசுக்குப் பல அரசுப் பள்ளி மாணவர்களும், எங்கள் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது.
அந்த பசியோடு படித்த நான் நல்ல மதிப்பெண் வாங்கினேன். இப்போ நீட் தேர்வில் 550 மதிப்பெண் பெற்று 7.5% உள் இட ஒதுக்கீடு கலந்தாய்வில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர இடம் கிடைத்துள்ளது. எனக்கும், என் ஆசிரியர்கள், என் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தான். இந்த நேரத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கனிவான கோரிக்கையை முன் வைக்கிறேன். என்னைப் போன்ற பசியால் தவிக்கும் ஏழை மாணவர்கள் தான் அரசுப் பள்ளிகளில் அதிகம் படிக்கிறார்கள். தாங்கள் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தது போல +2 வரை படிக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தால் லட்சபோலட்சம் ஏழை மாணவர்கள் பசியாறி மனநிறைவோடு படிப்பார்கள். அதே மனநிறைவோடு உங்களையும் பாராட்டுவார்கள்" என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளிகளில் +2 வரை மதிய உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள் பசியால் வாடும் ஏழை மாணவர்கள்....