5- ஆம் வகுப்பு மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பை தமிழக மக்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். பெற்றோர்கள் மாணவர்கள் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டங்களை தொடங்கி உள்ளனர்.
அறிவிப்பு வெளியான நிலையில் அடுத்த நாள் காலை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை அரசுப்பள்ளி காக்கும் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். மேலும் ஸ்டுடியோவில் கல்வியாளர் செல்வா உண்ணாவிரதம் தொடங்கினார். சர்க்கரை நோயாளியான அவர் மாலையில் உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசுப் பள்ளி பாதுகாக்காக முயன்று வரும் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். கல்லூரி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளுக்கு பொது தேர்வா? விடுமுறை நாட்களில் பள்ளியா? என்ற முழக்கங்களோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்கள் கூறும் போது, வேலைக்கு தான் தேர்வு வைத்தார்கள். இப்ப படிக்கவும் நீட், வைத்து மாணவர்களை கொன்றார்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியவில்லை. இப்ப 5- 8 ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்றால் எப்படி அந்த குழந்தைகளால் படிக்க முடியும். முதலில் அரசுப் பள்ளியில் எல்லா பாடத்திற்கும் ஆசிரியர் இருக்கிறார்களா என்றால் இல்லை. பல பாடங்களுக்கு ஆசிரியரே இல்லாமல் தான் வகுப்புகள் நடக்கிறது. பள்ளிகளின் நிலை இப்படி இருக்கும் போது பொதுத்தேர்வு என்பது குழந்தைகளின் படிப்பை நிறுத்த செய்யும் வழி என்று தோன்றுகிறது என்றனர்.