புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பாஜக கட்சியின் தமிழக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், "காலம் கணியும்; காரியங்கள் தானாக நடக்கும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்; நாம் அதை பார்க்க போகிறோம்" என்று கூறினார்.
இதையடுத்து அதிமுகவில் அங்கம் வகிக்கும் பாஜக நிர்வாகி திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக வேண்டும் என்று கூறுகிறாரே என்று அனைவரின் பார்வையும் பி.டி.அரசகுமார் மீது விழுந்தது. அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதுமட்டும் இல்லாமல் இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பி.டி.அரசகுமார், "திருமண விழாவில், ஜனநாயக ரீதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாழ்த்துக்கள் என்று தான் சொன்னேன். அடுத்து முதலமைச்சர் அவர் தான் என்று நான் சொல்லவில்லை.
நான் யதார்த்தமாகத்தான் பேசினேன், எதையும் திட்டமிட்டு பேசவில்லை.நாகரீகமான மரபின் அடிப்படையில் பேசியதை, அடுத்து முதல்வர் ஸ்டாலின்தான் என்று நான் திமுகவிற்கு ஆதரவாக பேசியதாக சிலர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பாஜக கட்சியின் நிர்வாகியாக இருந்துகொண்டு, வேறு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று எப்படி சொல்வேன். நான் பேசியது தவறாக எடுத்து கொள்ளப்பட்டது. நான் உள்ள கட்சிக்கு எதிராகவோ, துரோகமாகவே எதுவும் சொல்லவில்லை" என்று தெரிவித்தார்.