
நெல்லையில் புதிதாகக் கட்டப்பட்ட சுவர்களை வலுப்படுத்துவதற்காக தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள மாநகரப் பகுதியாக உள்ளது கொக்கரக்குளம் பகுதி. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. நேற்று அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், புதிதாக வைக்கப்பட்ட சுவர்களை வலிமைப்படுத்தும் வகையில் தண்ணீர் ஊற்றும் பணி இன்று நடைபெற்றது. இதில் வேலாயுதம், ரவி, சஞ்சய் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது கட்டிடத்தின் ஒரு பகுதியில் திறந்து கிடந்த மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் ஈர சுவர் மீது பரவி இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்தது. அதை அறியாமல் அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்ட பொழுது மின்சாரம் தாக்கி ரவி, சஞ்சய் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் கொக்கரகுளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.