பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடைக்கேட்ட வழக்குகள் முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை, வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன் இன்று (05/11/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், நாளை தொடங்க உள்ள பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது. வேல் யாத்திரைக்கு அனுமதிக்கேட்டு திருவள்ளூரில் அளிக்கப்பட்ட மனுவில் எத்தனை பேர் பங்கேற்பர் என குறிப்பிடப்படவில்லை. வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என பா.ஜ.க.விடம் தெரிவிக்கப்படும் என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல. வேல் யாத்திரையின் போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப்போவதில்லை. தனி மனித இடைவெளியை பின்பற்றவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பா.ஜ.க. அளித்துள்ள வாய்மொழி உத்தரவாதத்தை நம்ப முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நவம்பர் 15- ஆம் தேதி வரை அனுமதி அளிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. யாத்திரைக்கு அனுமதி கேட்கும் பா.ஜ.க. மனு மீது மாநில அரசு பிறப்பிக்கும் ஆணை பொறுத்து வழக்கு தொடரலாம் என கூறி வேல் யாத்திரைக்கு தடைக்கேட்ட இரு வழக்குகளையும் நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.