தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானத்தின் மீது பேசினர். சட்டப்பேரவையில் நடந்த விவாதங்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை செய்தித் துறையின் முக்கிய அதிகாரிகளின் மேற்பார்வையில் அத்தகைய வீடியோக்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
அ.தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மின் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் பேசிய பேச்சுக்கள் குறிப்பிடத்தக்கவை. அவர்களின் முழுமையான வீடியோவையும் செய்தித் துறை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்கள் ரிலீஸ் செய்வதில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சபாநாயகர் தரப்பில் விசாரித்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.