விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் நிலம் வைத்துள்ள சுப்பிரமணியன் என்பவர், தன் குடும்பத்தினருடன்வந்து மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆரணி முன்னாள் எம்.பி ஏழுமலை மீது புகார் அளித்துள்ளார்.
‘நான் வேலூர் ஆரணி சாலை பகுதியில் வசித்துவருகிறேன். அன்னமங்கலம் கிராமத்தில் எனக்கு சொந்தமான 10 சென்ட் இடம் உள்ளது. அதன் அருகாமையில் 30 சென்ட் அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தை 2010ஆம் ஆண்டு முதல் எனது அனுபவத்தில் உள்ளது. அந்த புறம்போக்கு நிலத்தின் வழியாக மட்டுமே என்னுடைய 10 சென்ட் இடத்திற்கு செல்வதற்கு வழி உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் வசிக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி ஏழுமலை, என் நிலத்தை விலைக்கு கொடுக்குமாறு கேட்டு வற்புறுத்தினார். அதற்கு நான், தர முடியாது என்று மறுப்பு தெரிவித்தேன். அதனால் என் மீது ஆத்திரமடைந்த ஏழுமலை, கண்ணமங்கலத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களை தூண்டிவிட்டு நான் பயன்படுத்தி வரும் வழியில் உள்ள இடத்தில் சுடுகாடு அமைத்து, இறந்துபோனவர்களின் உடலை புதைக்க வைத்தார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, அவ்வப்போது அடியாட்களை அனுப்பி எனது நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கொலை மிரட்டல் விடுத்துவருகின்றார். எனக்கும் என் மனைவி உயிருக்கும் அவரால் ஆபத்து ஏற்படும்நிலை உள்ளது. இதற்கு அவரே முழுப் பொறுப்பு. எனவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். முன்னாள் எம்.பி. ஏழுமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று சுப்பிரமணியன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி. மூலம் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். முன்னாள் அ.தி.மு.க. எம்.பி மீது காவல் துறை அதிகாரியிடம் ஒரு குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.