கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த 13.03.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று இணையத்தில் பட்டியல் வெளியிட்டது.
இந்த 1,582 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். என்.எல்.சி. நிறுவனத்தில் இந்த தமிழர் விரோதப் போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் தமிழர்களைப் புறக்கணிப்பதைக் கண்டித்தும், பட்டதாரி பொறியாளர் நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்கள், அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இறந்தவரின் வாரிசுகள், பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவரையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு தொடக்க ஊதியமே 60 ஆயிரம் ரூபாய் உள்ள நிரந்தரப் பணியில் வட மாநிலத்தவர்களைத் தேர்வுசெய்து, சேர்ப்பது திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது.
என்.எல்.சி. நிறுவனம் நேர்முகத் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு இப்பணிகளுக்கு 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு என்.எல்.சி. தமிழர்களைப் புறக்கணித்தால் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்க மாநில செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தமிழர்களைப் புறக்கணித்து நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மனித நேயப் பேரவை அமைப்பாளர் பஞ்சநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்க நிர்வாகிகள் குபேரன், மணிமாறன், பிரகாசு, பொன்னிவளவன், சின்னமணி, மகளிர் ஆயம் நிர்வாகிகள் கனிமொழி, தமிழ்மொழி, செந்தமிழ்ச்செல்வி, இளநிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.