கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்கரன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணி அளவில் இவர் பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எர்ணாகுளம் மாவட்டம் அவுலா காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால் சௌமியாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதனால் சௌமியா நிலைதடுமாறி கீழே விழுந்ததும் காரிலிருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ் அவரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து நிலைதடுமாறி சௌமியா தப்பி ஓடிய நிலையில் மீண்டும் விரட்டிச் சென்று சௌமியாவை பலமுறை கத்தியால் குத்தினார் அஜாஸ்.

அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து சௌமியாவின் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பெட்ரோல் தன்மீதும் பட்டதால் அஜாஸ் மீதும் தீப்பற்றியது. ஆடையில் தீப்பற்றிய நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை களைந்து உயிர் தப்பினார்.அவரை மடக்கிப்பிடித்த அக்கம்பக்கத்தினர் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து காவலர் அஜாஸை மீட்டனர்.

அவரது உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதால் அவரை ஆலப்புழை மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டுஉடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் எர்ணாகுளத்தில் பணியாற்றும் காவலர் அஜாஸ்க்கும் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது, இந்தக் கொலைக்கான பின்னணி என்ன, எதற்காக சௌமியாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜாஸிடம் வாக்குமூலம் பெறமுடியாத நிலையில் போலிசாா் மேற்கொண்ட விசாரணையில் சௌமியாவுக்கும் அஜாஸுக்கும் திருச்சூா் போலிஸ் பட்டாலியன் முகாமில் வைத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் மூலம் அஜாஸ் சௌமியா மீது ஆசை வளா்த்து கொண்டு அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் சௌமியா அஜாசிடமிருந்து 1.25 லட்சம் வாங்கிய கடனை அஜாசிடம் திருப்பி கொடுத்த பிறகு அவா் அந்த பணத்தை வாங்காததால் அஜாசின் வங்கி கணக்கில் சௌமியா செலுத்தியுள்ளாா். இதை பாா்த்த அஜாஸ் அந்த பணத்தை திரும்ப சௌமியா கணக்கிலேயே செலுத்தியுள்ளாா். இதையடுத்து இவ்வளவு பெரும் தொகையை ஏன் அஜாஸ் திரும்ப வாங்கவில்லை இதற்கு காரணம் என்ன என்று அஜாசின் வீட்டிற்கு சென்று சௌமியா கேட்ட போது அஜாசின் பதிலும், காரணமும் சௌமியாவுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவும், மூன்று குழந்தைகளையும் நான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்காக தான் இவ்வளவு பெரும் தொகையை தந்ததாகவும் கூறியுள்ளாா். இதை சம்மதிக்காத சௌமியா அஜாசுடன் பேச்சையும் தொடா்பையும் நிறுத்தி கொள்ள வேண்டுமென்று கண்டித்துள்ளாா். இதை சௌமியா தனது தாயாாிடமும் கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அஜாஸ் சௌமியாவை கொலை செய்திருப்பதாக தொிய வந்து இருக்கிறது.
.