கோவையில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நகைக்கடை ஒன்றில் 6.5 கிலோ நகைகள் சில மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார் கொள்ளையர்களைத் துரத்திப் பிடிக்கும் வீடியோ காட்சி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் படத்தில் வருவதைப் போல ஊரே எதிர்த்து நின்று கொள்ளையர்களை பிடிக்க விடாமல் பாதுகாக்க, எதிர்த்து சேசிங் செய்த தமிழக போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்கும் இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா சென்ற தமிழக போலீசார் அங்குள்ள உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட முஸ்தாக் என்ற திருடனைக் கைது செய்யக் களமிறங்கினர். ஆனால் ஊர் மக்களும், கொள்ளையனின் நண்பர்களும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டும், கற்களை எரிந்தும் தமிழக போலீசாரை தாக்க முயன்றனர்.
மேலும் அவர்களைக் கைது செய்ய ஊரே எதிர்த்து நின்றபோதும் விடாத தமிழக போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.