தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டுவதற்கான தேதியை தமிழக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும். தற்போது தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுத்திருந்தால் தற்போது அமலுக்கு வந்திருக்கும். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது தான் மரபு. ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டுக் கூட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த திட்டத்தால் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். அப்போது துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.