தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரம்180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவனத் தலைவர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (21.08.2024) “தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024” நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் நாளை நடைபெற உள்ளது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.