Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தமிழக ஆளுநரும் மதிக்க வேண்டும் - திருமாவளவன்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

 

thirumavalavan

 

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தமிழக ஆளுநரும் மதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’டெல்லியில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆம்ஆத்மி அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்ற பிரச்சனையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குத் தான் அதிகாரம். அந்த அரசாங்கத்திற்கு உதவியாக இருப்பதே ஆளுநரின் கடமை என்று அந்தத்தீர்ப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். யூனியன் பிரதேசமான டெல்லியிலேயே ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிற போது, மாநிலத்தில் அவருடைய அதிகாரம் அதைவிடவும் குறைவுதான் என்பதைத் தமிழக ஆளுநர் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் , அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கவேண்டும்.  நேரடி ஆய்வு செய்வதை இனியாவது மேதகு தமிழக ஆளுநர் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொருந்தக்கூடியதே. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் செயல்பாடுகளுக்குத் தினந்தோறும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு நிர்வாகத்தை முடக்கி வைத்துக்கொண்டிருக்கும் ஆளுநர் கிரண்பேடி அவர்கள் இந்த தீர்ப்பை பார்த்த பிறகாவது தனது போக்கை மாற்றிகொள்வார் என நம்புகிறோம்.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை பிரதிநிதித்துவ ஜனநாயகம் தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. எந்த ஒரு சட்டத்திற்கும் விளக்கம் அளிக்கும் போது அது ஜனநாயகத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர அதை பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரவர்க்கத்தினரின் கையில் அதிகாரத்தைக்குவிப்பது ஆபத்தாக முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.  இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் ஆளுனரின் மூலமாக மறைமுக ஆட்சி நடத்த முயற்சிக்கும் பாஜக அரசு இனியாவது தனது தவறான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.’’ 

சார்ந்த செய்திகள்