இந்துக் கோவில்களில் உள்ள நகைகளை அரசாங்கம் உருக்கும் திட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 07.06.2021 அன்று வழங்கிய தீர்ப்பில், அறநிலையத்துறையானது கடந்த 60 ஆண்டுகளாக கோவில் நகைகள் பற்றிய எந்த தணிக்கையும் செய்யவில்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறது.
மேலும் அனைத்து கோவில்களின் நகைகள் பற்றிய விவரத்தை வெளி தணிக்கை செய்து மக்களுக்கு எளிமையாக விளங்கும்படி பொது தளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அரசுக்குப் பரிந்துரை செய்தது. எனவே இது குறித்த விழிப்புணர்வையும், பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகையை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் தரப்பில் கொண்டு சேர்க்க மக்கள் விழிப்புணர்வு பிரச்சார யாத்திரை நேற்று (17.10.2021) சென்னையில் துவங்கியது. இந்நிலையில், எந்த ஒரு வழியிலும் தணிக்கை செய்யாமல் அவற்றை உருக்க முயற்சிப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாகும் கோவிலின் நகை குறித்த அடையாளங்களை அழிப்பதும் ஆகும்.
கோவில் நகைகளை உருக்கிவிட்டால் வெளி தணிக்கை செய்ய முடியாது. எனவே நகைகளை உருக்குவது தொடர்பான எந்த அதிகாரமும் அறநிலையத்துறைக்கு கிடையாது. அது கோவில் அறங்காவலர்களுக்கு உள்ளது” என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறநிலையத்துறையானது ஒரு கோவிலின் நகையைத் தேவைப்பட்டால் அதன் தற்போதைய சந்தை விலைப்படி வேறு ஒரு கோவிலுக்கு விற்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இப்படி கூறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. எனவே தமிழ்நாடு அரசின் இந்த தங்கம் உருக்கும் திட்டத்தைக் கண்டித்து வருகின்ற இருபத்து ஆறாம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.