கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூத்தனூர். இந்த ஊரைச் சேர்ந்த, 35 வயது உள்ள பெண் ஒருவர், கடந்த 23.04.2011 அன்று காலையில் வீட்டிலிருந்து மாடுகள் மேய்ப்பதற்காக வயல்வெளிப் பகுதிக்கு மாடுகளை ஓட்டிச் சென்றவர், இரவு வரை வீடு வந்து சேரவில்லை. மாடுகள் மட்டும் வீட்டுக்குவந்தன, நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.
மறுநாள் காணாமல் போன அந்தப் பெண் கூவாகம் அருகில் உள்ள ஓடைப் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி வழக்கில் குற்றவாளிகள் கிடைக்காததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. பிறகு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் துவக்கினர்.
இந்த நிலையில், கூத்தனூர் அருகே உள்ள துலங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள அவரது நிலத்திற்கு அருகாமையில் உள்ள விளைநிலத்தின் பாசனக் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்தும் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்கிற அம்பிகாபதி (27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது அம்பிகாபதி, தானும் தனது நண்பர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்ததாகவும் அவரிடமிருந்து 3 சவரன் நகையைக் கொள்ளையடித்தத்தாகவும் போலீசில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மேலும் தீவிர விசாரணை செய்ததன் அடிப்படையில் இளையராஜா என்கிற அம்பிகாபதி மற்றும் அவரது நண்பர்கள் எடையாளம் மதியழகன், வடிவேல், குருபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் மதியழகன் உட்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் இவர்களோடு சேர்ந்து ஆமூர் காலனி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33) என்பவரும் கூத்தனூர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததோடு அவர் அணிந்திருந்த பத்து கிராம் நகையும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், இவர்கள் 5 பேரும் சேர்ந்துகொண்டு அவ்வப்போது காடு கரைகளில் தனியாக ஆடு, மாடு மேய்க்கும் பெண்களை அதிலும் திருமணமான பெண்களை மட்டும் குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 2012ஆம் ஆண்டு திருநாவலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
இதேபோன்று திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களை வழிமறித்து கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்தும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதில் பல பெண்கள் நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் அவமானம் என்பதாலும் இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படும் என்பதாலும் வெளியே சொல்லவில்லை.
இதை மேற்படி இளைஞர்கள் அனைவரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சியங்களின் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகள் 5 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல் திருவெண்ணைநல்லூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றவாளிகள் மதியழகன், வடிவேல், குருபாலன், இளையராஜா ஆகியோருக்கு கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். தண்டனை பெற்ற ஐந்து குற்றவாளிகளும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில்நாதன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வாதாடியுள்ளார் என்று நீதிமன்றம் பாராட்டியுள்ளது. பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களில் சிலரை கொலை செய்யும் அளவிற்குத் துணிந்த, இந்த இளம் குற்றவாளிகளின் செயல் மனிதாபிமானமற்றது, கொடூரமானது. இந்தக் கொடூரர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பவம் நடந்தபோது எவ்வளவு மனவேதனை உடல் வேதனை அடைந்திருப்பார்கள். இறந்துபோன பெண்களுக்குக் கணவர், பிள்ளைகள், குடும்பம் என்று இருக்கும். அந்தக் குடும்பங்கள் தற்போது எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை இந்தக் கொடூர மனம் படைத்த குற்றவாளிகள் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே இல்லையே என்கிறார்கள் மகளிர் அமைப்பினர்.