Skip to main content

தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil Nadu Day Celebration; Competition announcement for school students

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.  இதில் முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படும். அதோடு முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார்கள். சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாகச் சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 09.07.2024 அன்று சென்னை அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரூபாயும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள் எனத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு : ஆட்சிமொழி தமிழ், பேச்சு போட்டிக்கான தலைப்பு : 1. குமரி தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகும். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காலி மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம்; டாஸ்மாக் நிர்வாகம் புதிய தகவல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது  கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (05.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபானப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். 

Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், “ஒரு நாளைக்குச் சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இத்திட்டம் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டமுடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Chief Minister MKStalin letter to MPs and MLAs

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் தன்னால் 18.12.2023 அன்று தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்மூலம் மொத்தம் 8.74 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்திடத் திட்டமிட்டு வருகிற 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தான் அதனைத் தொடங்கி வைக்க உள்ளேன்., அன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். 

Chief Minister MKStalin letter to MPs and MLAs

மக்களின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் 11.07.2024 அன்று நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்திட வேண்டும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 14 லட்சத்து 40 ஆயிரத்து 351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

அதேபோன்று, பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளது. அதோடு சத்தான உணவினை வழங்குவதன் காரணமாகப் பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதைக் கண்டு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாகத் திட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

Chief Minister MKStalin letter to MPs and MLAs

இந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும் கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம் என்ற தமது அரசின் உன்னத நோக்கத்தை எய்திடும் வகையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையொட்டி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தான் அதனைத் தொடங்கி வைக்க உள்ளேன். அன்றையதினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 11-7-2024 அன்று விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் மேலும் 15-7-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள இந்த திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் ஆதரவினை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.