பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பினார் மோடி.
இது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பாஜக மகளிர் அணி சார்பாக சிவன் கோவில்களில் மிருத்தியுஞ்சய ஜெபம் மற்றும் தமிழ்நாடு பாஜக இளைஞரணி சார்பாக மெழுகுவர்த்தி ஊர்வலமும் நேற்று மாலை நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ்நாடு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனின் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் முன்னிலையில் மிருத்தியுஞ்சய ஜெபம் மகளிர் அணி சார்பாக நடைபெற்றது. இது தொடர்பாக பாஜகவினர் கூறியதாவது; “பிரதமர் நரேந்திர மோடி, அரசு நிகழ்ச்சிக்காக பஞ்சாப் செல்லும் வழியில் தடுக்கப்பட்டார். வாகனங்கள் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. நம்முடைய பிரதமருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் பஞ்சாப் மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பஞ்சாப் மாநில அரசுதான் முழுமையான காரணம். இந்த செயலை கண்டிக்கும் வகையில் மோடியின் ஆயுளுக்கும், பாதுகாப்புக்கும் வலு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக சிவன் கோவில்களில் மிருத்தியுஞ்சய ஜெபம் மற்றும் தமிழக பாஜக இளைஞரணி சார்பாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறுகிறது” என்றனர்.