கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி (14.10.2024) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்தவர்கள் அனைவரும் ஆளுநரிடம் தங்களது பட்டங்களை பெற்றனர். அப்பொழுது ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர் மேடையில் பட்டம் பெறும்போது ஆளுநரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றதால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் மாணவர் பிரகாஷ் ஆளுநரிடம் அந்த மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில், ‘பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. கைடுகள் என நியமிக்கப்படுபவர்கள் முனைவர் படிப்பிற்கான வைவா போன்ற நேரங்களில் தனிப்பட்ட குடும்ப வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளையிடுகின்றனர். ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்துகின்றனர். எங்களைப் போன்ற எளிமையான மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதியில் முறையான வசதிகள் இல்லை. கல்லூரியிலும் பல முறைகேடுகள் நடக்கிறது’ என மனுவில் தெரிவித்திருந்தார். இதே போன்ற புகார்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் எழுந்திருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தரக்குறைவாக நடத்தக்கூடாது என உயர் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “ஆராய்ச்சி மாணவர்களைப் பிற பணிகளுக்கும். தனிப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுத்தும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். முனைவர் பட்டத்திற்காக மாணவர்களை அலைக்கழிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் புகார் அளித்தால் உடனடியாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களை தங்களது வீட்டு வேலைகளை செய்யுமாறு பேராசிரியர்கள் துன்புறுத்துவதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் உயர் கல்வித்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.