அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக். 15ம் தேதி நடத்தப்படுகிறது. முதல் 1500 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். அதேபோல் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022 - 2023 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வு மூலம் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை திட்டத்திற்கு, 50 சதவீத பயனாளிகள் அரசுப்பள்ளிகளில் இருந்தும், எஞ்சிய 50 சதவீத மாணவர்கள் அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இருந்தும் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ் திறனறிவுத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் 50 ரூபாய் சேர்த்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது. தேர்வில் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். கொள்குறி வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். எஸ்எஸ்எல்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும்.
இலக்கணம், அற இலக்கியம், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், பொருத்துக, பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்தல், சரியான, தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல், கூற்று, காரணம் ஆகிய வகைமைகளில் வினாக்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையப் பட்டியலை அரசுத்தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இத்தேர்வை 2.60 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ் திறனறிவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வு மையம் மற்றும் மாதிரி தேர்வு முறைகள் குறித்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள்துறை இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.