Skip to main content

நாம் தமிழர் உட்பட மூன்று கட்சிகளுக்குத் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

symbol to three parties including naam tamilar

 

சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 'குக்கர்' சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

 

அதேபோல் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். புதுச்சேரிக்கு மட்டும் 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கிய நிலையில், தமிழகத்திற்கு இன்னும் சின்னம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.