திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்து பதிவிட்டது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளரான சுகிதா நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,
பொதுவாக எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகள், எதிர்ப்புகள் இருக்கிறது. அரசியலிலும் இருக்கிறது. பெண்களை பிடிக்காவிட்டால் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள். சிலர் பட்டும், படாமல் செய்வார்கள். எனக்குக்கூட கடந்த காலங்களில் இதுபோன்ற தொந்தரவுகள் இருந்தது. பின்னர் குரல் கொடுத்தார்கள். பொதுவெளியில் உள்ள பெண்களை சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுகிறார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் செய்திருப்பது அதன் உச்சம். அநாகரிகத்தின் உச்சம்.
கேள்வி கேட்ட பெண் நிருபரை ஆளுநர் கன்னத்தில் தட்டுகிறார். கேட்டால் பேத்தி என்கிறார். இதேபோல் ஒரு ஆண் நிருபர் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்டால் அவரது கன்னத்தில் தட்டுவார்களா. ஆளுநர் சொன்ன பதில் ஏற்புடையது அல்ல. ஆனால் அவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் நேரத்தில், எஸ்.வி. சேகர் ஏன் இந்த பதிவினை ஷேர் செய்ய வேண்டும்.
கடும் எதிர்ப்பு வந்த பின்னர் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுக்கிறார். இவர் மேல் எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ, அதைவிட அதிகமாக அந்த பதிவை வெளியிட்ட திருமலை சா என்பருக்கு எதிர்ப்பு அதிகம். எல்லோருமே இதில் பெண் நிருபரை மட்டுமே இழிவாக பேசியதாக குறிப்பிடுகிறார்கள். இதில் இன்னொரு விசயம் அடங்கியிருக்கிறது. பத்திரிக்கை துறையில் இருக்கும் ஆண்களையும் கேவளப்படுத்திருக்கிறார்கள். ஆண் பத்திரிக்கையாளர்களை உயர்த்தி பேசவில்லை.
தமிழ் பத்திரிக்கைத்துறைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. 30 வருடங்களை கடந்த நக்கீரனுக்கு சமூதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. 40 வருடம், 50 வருடம் என்று ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு மரியாதை உள்ளது. இவருடைய வயதை கடந்த மீடியாக்கள் இங்கு உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த மீடியாக்களையும் இழிவுப்படுத்துகிறார். இவர் மீடியா வெளிச்சத்தில்தான் நடிகராக முன்னேறியுள்ளார். படிப்பறிவில்லாதவர்களே மீடியாக்களில் உள்ளனர் என்கிறார். இவர் என்ன படித்து முடித்து சினிமாவிற்கு வந்தார். இவ்வாறு கூறினார்.