
நடிகரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.வி. சேகருக்குச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (21.03.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “எஸ்.வி. சேகர் சரணடைவதில் இருந்து 4 வாரக் காலத்திற்கு இடைக்காலமாக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.