
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் துறை ரீதியான மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்றைய கூட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி மடிக்கணினி திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசுகையில், “முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த பொழுதும், வெளியேறிய போதும் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர்கள் நாங்கள். அவருடைய திரைப்படம் வெளிவந்த போது கூட அதைப் பார்த்து எப்படி இருக்கிறது என பேசும் அளவிற்கு இருந்தோம். ஆனால் இப்பொழுது அதிமுகவில் கூட்டல், கழித்தல் என எல்லாக் கணக்குகளையும் வேறு ஒருவர் (பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டு) போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக தொண்டர்களை அபகரிக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லேப்டாப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாக ஒரு மடிக்கணினி 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மடிக்கணினி போல உங்கள் மடியில் உள்ள கனத்தை அவர்கள் பறித்துக் கொள்வார்கள். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். அப்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சிரித்தார். அந்நிலையில், “என் கருத்துக்கு பாஜக வானதி சீனிவாசனே சிரித்து விட்டார். பூனை குட்டி வெளியே வந்து விட்டது என்று தான் அர்த்தம்” என அமைச்சர் பேசினார். அதே சமயம் அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையின் காணொளியை இணைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான மடிக்கணிணி ( Laptop) வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி. யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத ஆல் ரவுண்ட் தமிழக பட்ஜெட்டை (all - round TNBudget2025) அளித்து, பதிலுரையிலும் செண்டம் (centum) வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.