
கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் அண்மை காலமாக பெண்களை வைத்து பணம் பறிக்கும் ஹனி டிராப் என்ற முயற்சியால், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்ட தகவல் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் விளக்கம் கேட்டு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் காங்கிரஸ் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் காகிதங்களை கிழித்து சபாநாயகர் யூ.டி.காதர் மீது வீசினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காகிதங்களை கிழித்து வீசி அவையில் ஒழுங்கினமாக செயல்பட்ட 18 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார். மேலும், அவர்கள் 6 மாதம் காலம் வரை அவைக்கு வரத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 18 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை கர்நாடகா காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.எல்.கே. பாட்டீஸ், அரசாங்கத்தில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை ஏற்கெனவே அறிமுகப்படுத்தினார். அப்போது, இந்த சட்டத் திருத்தத்துக்கு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சட்ட மசோதாவுக்கு பா.ஜ.கவினர் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும், அதிக உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு இருந்தததால், இந்த சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.