
தஞ்சை மாவட்டம் பாபாநாசம் அருகே உள்ள இராஜ கோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராக நர்க்கீஸ்கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, இந்து சமய அறநிலையத்துறை ஒரு இஸ்லாமியரை கோவில் அறங்காவலராக நியமித்துள்ளது என்று புயலைக் கிளப்பியிருந்தார். இது பேசு பொருளாக மாறிய நிலையில் நர்க்கீஸ்கான் இஸ்லாமியர் இல்லை என்று இந்துதான் என்று கோயில் அறங்காவலர் குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அறங்காவலர் நர்க்கீஸ்கான், “தஞ்சாவூர் பாபாநாசம் இராஜ கோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராக 15 நாட்களுக்கு முன்பு என்னை நியமித்தார்கள். அறங்காவலர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். தெய்வீக வழிப்பாட்டில் சிறப்பாக இயங்க வேண்டும் என்று நினைத்துதான் இதற்குள் வந்திருக்கிறோம். என்னுடைய பெயர் நர்க்கிஸ்கான்; நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். அது உண்மையில்லை. நான் இந்துதான்; அதற்கான ஆதாரங்களை அறங்காவலர் துறை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறோம்.
நான் எனது தாய் வயிற்றில் இருக்கும் போது மிகவும் ஆபத்தான நிலையில் பிரசவம் பார்த்த என் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் ஒரு இஸ்லாமியர். அவர் பெயர்தான் நர்க்கீஸ்கான். உயிர்கொடுத்து என்னைக் காப்பாற்றினார் என்ற நன்றி விசுவாசத்திற்காக அவரது பெயரை எனக்கு வைத்தார்கள். மற்றபடி நான் இந்துதான். இதுகுறித்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள்” என்று விளக்கமளித்துள்ளார்.