Skip to main content

‘ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது’ - பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 05/05/2025 | Edited on 05/05/2025

 

Supreme Court orders Pon.Manikavel to surrender his passport

தமிழக காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டி.எஸ்.பி.யாக காதர் பாட்ஷா செயல்பட்டபோது சிலை கடத்தல் மன்னன் என்று சொல்லக்கூடிய சுபாஷ் கபூரை சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் பொன். மாணிக்கவேலைச் சிறப்பு அதிகாரியாக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அச்சமயத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.

இத்தகைய சூழலில் தான் காதர் பாஷா தனது கைது சம்பவத்தைக் குறிப்பிட்டு, பொன். மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொன். மாணிக்கவேலுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அவர் மீது சி.பி.ஐ. 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக பொன்.மாணிக்கவேல் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதில் இருந்து அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் கூறியதாவது, ‘பொன்.மாணிக்கவேல் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், சிபிஐ குறித்து தரக்குறைவாகவ்ம் பேசி வருகிறார். இதனால், விசாரணையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அவர் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதன் அடிப்படையில் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்’ என்று வாதிட்டது. 

அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தன்னுடைய பாஸ்போர்ட்டை இந்த வழக்கு நடைபெறும் கீழமை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கு தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு விரிவான பதிலை பொன்.மாணிக்கவேல் தரப்பு எழுத்துப்பூர்வமாக சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

சார்ந்த செய்திகள்