நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து கரூருக்கு வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் என்ன லோடு என கேட்க, அதை ஓட்டி வந்த டிரைவர் முரணாக பதில் சொல்ல சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர்.
அப்போது லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவர் தொட்டியம் காட்டுப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கரூர் ராயனூரை அடுத்த வெள்ள கவுண்டர் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதன் அடிப்படையில் அதிமுக கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 3 டன் குட்கா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். சம்மந்தப்பட்ட இடம் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை போலீஸ் சரகத்திற்கு வருவதால் இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கரூர் டவுன் டிஎஸ்பி கும்ம ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் குடோனை திறந்து உள்ளே இருந்த சுமார் 3 டன் குட்கா பொருட்கள் இரண்டு மினி லாரிகளில் ஏற்றி ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.
இதனால் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய போலிஸ் முயற்சி செய்த போது கரூர் அமைச்சர் தலையிட்டு ஆளை மாத்தி வழக்கு போடுங்கள் என்று சொல்ல கடைசியில் போலிஸ் ஜெயராஜ்க்கு சொந்தமான இடத்தை தங்கராஜ் என்பவருக்கு வாடகைக்கு விட அதில் தங்கராஜ் குட்கா குடோன் வைத்திருந்தாக வழக்கு பதிவு செய்து ஆளை மாத்தினார்கள்.
ஆளும் கட்சி குட்கா கடத்திய வழக்கில் அமைச்சர் உள்ளே புகுந்து ஆளை மாத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.